ராமநாதபுரத்தில் கோர விபத்து: கார் மோதி 4 பேர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மரைக்காயர் பட்டினம் பகுதியில் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கார் மோதி பரிதாபமாக இறந்தனர்.
ராமநாதபுரத்தில் கோர விபத்து: கார் மோதி 4 பேர் பலி
Published on

ராமநாதபுரம்,

ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து நாகம்மாள் என்பவர் தனது மகன், மகள் மற்றும் குடும்பத்தினருடன் கார் ஒன்றில் ராமேசுவரம் கோவிலுக்கு வந்துள்ளார். காரை, கோவை மேட்டுப்பாளையம் காரமடை பகுதியை சேர்ந்த சம்பத்குமார்(வயது 22) என்பவர் ஓட்டினார்.

ராமேசுவரம் நோக்கி வந்த இந்த கார், மண்டபம் மரைக்காயர் பட்டினம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காலை 6 மணி அளவில் வந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது.

பள்ளத்தில் கவிழ்ந்தது

அப்போது கார் சாலையோரம் நடை பயிற்சி சென்ற மண்டபம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி (64) மீது மாதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீதும் கார் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் காரின் பக்கவாட்டில் சிக்கிய நிலையில் கார், 3 முறை உருண்டு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்த மண்டபத்தை சேர்ந்த உமாமகேஸ்வரன்(40), ஜெகன்(32), ஜெகதீஸ்வரன்(18) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நடைபயிற்சியில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். காரில் இருந்தவர்களும் காயம் அடைந்து தங்களை காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பினர்.

தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார்.

4 பேர் படுகாயம்

காரில் வந்த கோவை மேட்டுப்பாளையம் காரமடை பகுதியை சேர்ந்த நாகம்மாள்(42), அவரது மகன் சந்தோஷ்குமார்(22), மகள் மோகனப்பிரியா(20) மற்றும் உறவினர்கள் விஜயலட்சுமி(55) ஆகிய 4 பேரும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி வந்த சம்பத்குமார் உயிர் தப்பினார். விபத்து குறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சம்பத்குமாரை கைது செய்தனர்.

இந்த விபத்தில் இறந்த மகேஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகிய 2 பேரும் மரைக்காயர்பட்டினம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்ப்பதாகவும், அவர்கள் 2 பேரையும் பங்கில் வேலைக்கு விடுவதற்காக ஜெகன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது இந்த விபத்து நடைபெற்றதாகவும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com