கோடை விடுமுறையையொட்டி 2 மாதங்களில் ஒகேனக்கல்லுக்கு 4 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

பள்ளிகள், கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
ஒகேனக்கல்
கோப்புப்படம்
Published on

தர்மபுரி,

சுற்றுலா தலம்

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். ஒரு ஆண்டில் சராசரியாக 15 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இந்த மாதங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக 2 ஆயிரம் கார்கள் மற்றும் பேருந்துகள் மூலமாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மூலமாகவும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளனர்.

4 லட்சம் பேர்

சனி, ஞாயிறு தவிர வாரத்தின் மற்ற நாட்களில் ஒரு நாளில் சராசரியாக 500 கார்கள், பேருந்துகள், 500 இருசக்கர வாகனங்கள் மூலம் ஒகேனக்கல்லுக்கு வந்து சென்றுள்ளனர். இதன்படி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 4 லட்சம் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் காவிரி ஆறு மற்றும் ஒகேனக்கல் அருவிகளில் குளித்துள்ளனர். இவர்கள் பரிசல்களில் சென்று ஒகேனக்கல்லின் இயற்கை அழகை கண்டு ரசித்து இருக்கிறார்கள்.

உணவு - தங்குமிடம்

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

பள்ளிகள், கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இவர்களுக்கு தரமான உணவு சுகாதாரமான முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் பரிசல் சவாரி செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டது.

ஒகேனக்கல்லில் விரிவுபடுத்தப்பட்ட ஆயில் மசாஜ் கூடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதலாக உடை மாற்றும் அறைகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை காலத்தில் ஒரே நேரத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வந்த போதும் அவர்களுக்கான உணவு, தங்குமிடம் ஆகிய வசதிகள் தேவையான அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com