சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் இந்திய சுற்றுலா-தொழில் பொருட்காட்சிக்கு 4½ லட்சம் பேர் வருகை - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் இந்திய சுற்றுலா-தொழில் பொருட்காட்சிக்கு 4½ லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை தீவுத்திடலில் நடந்து வரும் இந்திய சுற்றுலா-தொழில் பொருட்காட்சிக்கு 4½ லட்சம் பேர் வருகை - அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
Published on

தமிழக சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் பி.சந்தரமோகன், சுற்றுலா இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே மாமல்லபுரம் அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத்தலமாக முன்னேறி உள்ளது. மாவட்ட அளவில் உள்ள சுற்றுலா தலங்களின் சிறப்புகளை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில் உங்களது பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலாத்துறையின் மூலம் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்கள் குறித்த மிகச்சிறந்த குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதனை தங்கள் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு, சுற்றுலாவை நெறிப்படுத்தி சேவையின் தரத்தை உயர்த்தவும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சாகச சுற்றுலா, கேரவன் சுற்றுலா, சுற்றுலா முகாம்கள் நடத்துபவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் வீடுகளிலேயே தங்கும் வசதி மற்றும் உணவு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்கி வரும் சுற்றுலா செயல்பாட்டாளர்களை சுற்றுலாத்துறையில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தங்கள் மாவட்டங்களில் சுற்றுலா செயல்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ளார்களா? என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை இதுவரை 3 லட்சத்து 64 ஆயிரத்து 76 பெரியவர்கள் மற்றும் 85 ஆயிரத்து 682 சிறிவர்கள் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 49 ஆயிரத்து 758 பொதுமக்கள் பார்வையிட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் லி.பாரதிதேவி, சுற்றுலாத்துறை இணை இயக்குனர் ப.புஷ்பராஜ் உள்பட சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள், சுற்றுலா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com