சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னை,
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன். இவரது மனைவி சுமதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் இருக்கின்றனர். மருத்துவர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடும்பத்தினர் 4 பேரும் அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி மிரட்டலா?
பாலமுருகன் வீட்டில் 4 பேருக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த காசோலைகளையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். டாக்டர் பாலமுருகனை பார்க்க, அவரது வீட்டுக்கு பலர் வந்து போவதுண்டு. அந்த வகையில், கடன் கொடுத்தவர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்து மிரட்டி விட்டு சென்றார்களா? என்றும், கடந்த சில தினங்களில் டாக்டர் பாலமுருகனை யார் யார் வந்து வீட்டில் சந்தித்தார்கள்? என்பதை அறிவதற்காக குடியிருப்பு வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களில் டாக்டர் பாலமுருகன் வழக்கம் போல் பேசினாரா?, அவரது செயல்களில் மாற்றம் ஏதாவது இருந்ததா? எனவும் அவரின் வீட்டில் பணிபுரியும் வேலையாட்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் கந்து வட்டிக்கு பணம் வாங்கியிருந்தாரா? அதை கொடுக்க வேண்டும் என யாரும் மிரட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. சென்னையின் முக்கிய பகுதியான அண்ணா நகரில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.