

களியக்காவிளை:
குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக அதிக பாரத்தில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், குமரி மாவட்டத்தில் பாறைகள் உடைத்து கடத்துவதை தடுக்க வேண்டும் எனவும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக அதிக பாரத்தில் கனிமவளம் ஏற்றி வந்த 4 கனரக லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.