வங்கி அதிகாரி உள்பட 4 பேர் பலி

விராலிமலை அருகே பயணிகள் நிழற்குடையில் கார் மோதி வங்கி அதிகாரி உள்பட 4 பேர் பலியாகினர்.
வங்கி அதிகாரி உள்பட 4 பேர் பலி
Published on

வங்கி அதிகாரி

திருச்சி உறையூரை சேர்ந்தவர் நாராயணன் மகன் முரளி (வயது 37). இவர் தில்லைநகரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் கார் கடன் தொகை வசூல் செய்யும் பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். அதே வங்கியில் விவசாய கடன் மண்டல பிரிவு மேலாளராக திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த முருகன் மகன் ரவிக்குமார் (47) என்பவரும் பணியாற்றி வந்தார்.

இவர்கள் இருவரும் தென்காசியில் உள்ள ஒரு வங்கியில் ரவிக்குமார் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக திருச்சி கல்லுக்குழியை சேர்ந்த கணேஷ் குமார் என்பவரின் வாடகை காரில் சென்றனர். பின்னர் அதே காரில் அவர்கள் திருச்சிக்கு திரும்பினர். அப்போது அவர்களுடன் காரில் தென்காசியை அடுத்த மேலகரம் பகுதியை சேர்ந்த தசமுத்து மகன் சுரேஷ் (32), அவரது நண்பர் முத்துகிருஷ்ணன் (33) ஆகியோரையும் அழைத்து கொண்டு திருச்சிக்கு வந்து கொண்டிருந்தனர்.

4 பேர் பலி

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் கார் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள லஞ்சமேடு பகுதியில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேனில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பயணிகள் நிழற்குடையில் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் காரில் இருந்த ரவிக்குமார், டிரைவர் கணேஷ்குமார், சுரேஷ்,முத்துகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் முரளி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தமுரளியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறைஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே ரவிக்குமார் உள்பட 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்து குறித்து அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ், முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒருவரிடம் பொருட்கள் வாங்குவதற்காக வந்ததாக கூறப்படுகிறது. விராலிமலை அருகே கார் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com