வனவிலங்குகளை வேட்டையாடிய அண்ணன்-தம்பி உள்பட 4 பேர் கைது: நாட்டு துப்பாக்கி பறிமுதல்

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தென்னந்தோப்பில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு, அங்கு கொய்யாப்பழத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடித்ததில் முகம் சிதைந்து பலியானது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரை அடுத்த மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தென்னந்தோப்பில் மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது அங்கு கொய்யாப்பழத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை மாடு கடித்ததில் முகம் சிதைந்து பலியானது.
இதுகுறித்த புகாரின்பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக கொய்யாப்பழத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை மாடு கடித்ததில் இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மேலக்கடையநல்லூர் மலம்பாட்டை தெருவைச் சேர்ந்த பால்பாண்டி (வயது 46) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பால்பாண்டியிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் தனது தம்பி மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் பழங்களில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்தும், நாட்டு துப்பாக்கி மூலமும் வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது.
இதுதொடர்பாக பால்பாண்டியின் தம்பி சந்தனபாண்டி(40), நண்பர்களான பண்பொழி கரிசல்குடியிருப்பு மேல பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சுபாஷ்(20), செங்கோட்டை மேலூர் கே.சி.ரோடு பகுதியைச் சேர்ந்த பரமசிவன் மகன் ராமசுப்பிரமணியன்(எ) ராம்ஜி(35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சந்தனபாண்டியிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேரையும் போலீசார் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.