லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி: நீதிபதி உள்பட 2 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்ட நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த்தின் சொந்த ஊரான திருச்செந்தூரில், கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதியதியாக பணியாற்றி வரும் பூர்ன ஜெய ஆனந்த், நீதிமன்ற அலுவலக உதவியாளர்கள் உதயசூரியன், ஸ்ரீதர்குமார், காவலர் நவீன்குமார், ரெக்கார்டு கிளார்க் வாசு ராமநாதன், வழக்கறிஞர் தனஞ்செய ராமசந்திரன் ஆகியோர் ஒரே காரில் திருச்செந்தூர் சென்று விட்டு, மீண்டும் தஞ்சாவூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோடு, எட்டயபுரம் அருகே மேலகரந்தை ஜங்ஷன் அருகே முன்னால் ஜிப்சம் லோடு ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி மீது இவர்கள் சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபததில் ஸ்ரீதர்குமார், நவீன்குமார், வாசு ராமநாதன், தனஞ்செய ராமசந்திரன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த் மற்றும் அலுவலக உதவியாளர் உதயசூரியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருப்புகோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் லாரியை ஓட்டிவந்த கூடலூர் மாவட்டம் பொம்மரக்குடியைச் சேர்ந்த குளஞ்சி மகன் விஜய் ராஜ் (வயது 27) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான், விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் படுகாயம் அடைந்த நீதிபதி பூர்ன ஜெய ஆனந்த்தின் சொந்த ஊர் திருச்செந்தூர் ஆகும். அவர் இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






