ரூ.85 கோடி மோசடி வழக்கில்நிர்வாக இயக்குனர்கள் உள்பட 4 பேர் கைது

திண்டிவனத்தில் தனியார் நிறுவனம் நடத்தி ரூ.85 கோடி மோசடி செய்த வழக்கில் நிர்வாக இயக்குனர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.85 கோடி மோசடி வழக்கில்நிர்வாக இயக்குனர்கள் உள்பட 4 பேர் கைது
Published on

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகம் அருகில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இந்நிறுவனத்தை திண்டிவனம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 45) என்பவர் நடத்தி வந்தார். இந்நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதம் கழித்து ரூ.90 ஆயிரமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.2 லட்சம் செலுத்தினால் ரூ.3 லட்சத்து 60 ஆயிரமும் வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தினர் ஆசைவார்த்தை கூறினர்.

இதனை நம்பிய திருவண்ணாமலை மாவட்டம் வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மண்ணுலிங்கம் (51) மற்றும் அவருக்கு தெரிந்த 8 பேர் சேர்ந்து மொத்தம் ரூ.55 லட்சத்தை செலுத்தியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் அந்நிறுவனத்தினர் ஏமாற்றிவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தனியார் நிர்வாக இயக்குனர்கள் மாயகிருஷ்ணன், மஞ்சுளா, மாயகிருஷ்ணன் மனைவி பிரபாவதி மற்றும் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கவுதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுபோன்று 7 ஆயிரம் பேரிடம் இருந்து அவர்கள் மொத்தம் ரூ.85 கோடி வரை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக வீரமணி (46), செந்தில்குமார் (45) ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் மாயகிருஷ்ணனின் அண்ணன் அன்பு என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திண்டிவனத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன், அவரது மனைவி பிரபாவதி (38) மற்றும் அன்பு (50), மஞ்சுளா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com