வடமாநில தொழிலாளர்களை உயிருடன் எரித்துக்கொல்ல முயற்சி-4 பேர் படுகாயம்

ஜேடர்பாளையம் அருகே வடமாநில தொழிலாளர்கள் மீது மண்எண்ணெய் ஊற்றி உயிருடன் எரித்துக்கொல்ல முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on

பரமத்திவேலூர்

உயிருடன் எரித்துக்கொல்ல முயற்சி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். என்ற முத்துசாமி. இவரது வெல்ல ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் அந்த பகுதிக்கு பின்புறமாக மர்மநபர்கள் சிலர் வந்துள்ளனர்.

அவர்கள் கொட்டகையில் ஒரு அறையின் ஓரத்தில் இருந்த சிமெண்டு அட்டையை உடைத்தனர். பின்னர் அதன் வழியாக தாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்ற ராகேஷ் (19), சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதில் தீ அவர்கள் 4 பேர் மீதும் மளமளவென பற்றி எரிந்ததும், கொட்டகை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

4 பேர் படுகாயம்

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ள மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்தனர். பின்னர் அவர்கள் உடலில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதில் ராகேஷ், சுகிராம் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

மேலும் யஸ்வந்த், கோகுல் ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (நாமக்கல்), சசிகுமார் (ஈரோடு) மற்றும் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

8 தனிப்படைகள் அமைப்பு

நாமக்கல் மாவட்ட தடய அறிவியல் துறை மாவட்ட உதவி இயக்குனர் வடிவேல் தலைமையிலான குழுவினர் தீ விபத்து ஏற்பட்ட இடங்களில் இருந்த பொருட்களை சேகரித்து தடய அறிவியல் ஆய்வுக்காக கொண்டு சென்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. அசம்பாவிதங்களை தடுக்க அந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மர்மநபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில தொழிலாளர்களிடம் கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி நித்யா நேரில் வாக்கு மூலம் பெற்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com