மதுபான பார் பூட்டை உடைத்து சோதனையிட்ட 4 போலீசார் இடமாற்றம்: தூத்துக்குடி எஸ்.பி. அதிரடி

தூத்துக்குடியில் மதுபான பார் பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்து போலீசார் 4 பேர் சோதனையில் ஈடுபட்ட வீடியோ கடந்த 2 நாட்களாக வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுபான பார் பூட்டை உடைத்து சோதனையிட்ட 4 போலீசார் இடமாற்றம்: தூத்துக்குடி எஸ்.பி. அதிரடி
Published on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபான பார் ஒன்று உள்ளது. கடந்த 18-ம் தேதி காலை 7:30 மணியளவில், சிவில் உடையில் வந்த 4 போலீசார் இந்த பாருக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள் இருவரை விசாரணை என்ற பெயரில் பிடித்துத் தாக்கியதோடு, மதுபான பாரின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர்.

உள்ளே தீவிர சோதனை நடத்திய போலீசார், அங்கு சட்டவிரோதமான பொருட்கள் ஏதும் சிக்காததால் ஆத்திரமடைந்து, அங்கிருந்த காலி மதுபாட்டில் மூட்டைகளைக் கீழே தள்ளிச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பாருக்கு வெளியே வந்த போலீசார், அங்கு நின்றிருந்த பொதுமக்களையும் தாக்கி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகின. இந்த வீடியோ காட்சிகள் கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்-அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில், பாருக்குள் அத்துமீறி நுழைந்த 4 பேரும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த போலீசார் என்பது உறுதி செய்யப்பட்டது.

சட்டவிரோத மது விற்பனை நடக்கிறதா என்று சோதனையிடச் சென்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டாலும், அதிகாலை நேரத்தில் கடையின் பூட்டை உடைத்ததும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்களைத் தாக்கியதும் மனித உரிமை மீறல் எனப் புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன், போலீஸ் ஏட்டு சண்முகநாதன் ஆகியோர் ஆயுதப் படைக்கும், ஏட்டுகள் சமியுல்லா, சரவணன் ஆகியோர் முறப்பநாடு காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை தூத்துக்குடி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com