

சென்னை,
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, தற்போது இயக்கப்பட்டு வரும் 4 சிறப்பு ரெயில்களின் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் (ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06029/06030), திருநெல்வேலி - தாம்பரம் (ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06165/06166), தூத்துக்குடி - தாம்பரம் (திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06017/06018), சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06045/06046) ஆகியவை ஜூலை மாதத்தில் மேலும் 4 முறை இயக்கப்படும் வகையில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை - கன்னியாகுமரி சிறப்பு ரெயில் தவிர ஏனைய ரெயில்களுக்கு முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்த சிறப்பு ரெயிலுக்கு மட்டும் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.