

சேலம்,
சேலம் வழியாக செல்லும் 4 ரெயில்கள் முழுவதுமாகவும் மற்றும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டதால் வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
சேலம் வழியாக செல்லும் சில ரெயில்கள் நிர்வாக காரணங்களுக்காக முழுவதுமாகவும், பகுதியாகவும் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதாவது, ஈரோடு - மேட்டூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண் 56103), மேட்டூர் - ஈரோடு பாசஞ்சர் ரெயில் (56104), ஈரோட்டில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஈரோடு -ஜோலார்பேட்டை ரெயில் (56108), ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் (56107) ஆகிய ரெயில்கள் நேற்று முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.
மேலும் மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (16811) திருச்சி முதல் சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது. இதேபோல் சேலம் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16812) சேலம் முதல் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது, இந்த ரெயில்கள் திடீரென முழுவதுமாகவும் மற்றும் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டதால் வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினர்.