மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் சாவு

திண்டிவனம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்தான்.
மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் சாவு
Published on

மயிலம்:

திண்டிவனம் அருகே உள்ள வேங்கை கிராமத்தை சேர்ந்தவன் ஆறுமுகம் மகன் யுவனேஸ்வரன்(வயது 4). ஆறுமுகத்தின் தம்பி ராஜா மகன் நித்திஷ்வரன்(4). இவர்கள் 2 பேர் உள்பட 4 சிறுவர்கள் நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது 2 மின்கம்பங்களுக்கு இடையே சென்ற மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. அந்த மின்கம்பியை யுவனேஸ்வரனும், நித்திஷ்வரனும் எதிர்பாராதவிதமாக மிதித்தனர். இதில் மின்சாரம் தாக்கியதில் யுவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தான். நித்திஷ்வரன் படுகாயமடைந்தான். மற்ற சிறுவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யுவனேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த நித்திஷ்வரனை சிகிச்சைக்காகவும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாக்குவாதம்

இந்த நிலையில் வேங்கை கிராம மக்கள் ஒன்று திரண்டு ஜக்காம்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் மின் ஒயர் அறுந்து விழுந்து 3 நாள் ஆகிறது. மின் ஒயர் அறுந்து விழுந்த உடனேயே மின்வாரிய அலுவலகத்துக்கும், எங்கள் பகுதி ஒயர்மேனிடமும் தகவல் தெரிவித்தோம். உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்து விட்டான். இந்த விபத்துக்கு மின்சார வாரிய அதிகாரிகளும், ஊழியர்களுமே காரணம் என்று கூறினர்.

இதை ஏற்றுக்கொள்ளாத மின்வாரிய ஊழியர்கள், கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஜக்காம்பேட்டையில் உள்ள சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், மயிலம் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 30 நிமிடத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com