

சென்னை,
சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலை சிவராஜ் தெருவில் வசிப்பவர் திலகராஜ். இவரது 4 வயது மகன் சித்தார்த். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இட்லி தட்டின் துளையில் தனது விரலை விட்டுள்ளார். அதில் விரல் பலமாக சிக்கிக்கொண்டதால் சிறுவன் சித்தார்த் வலியால் அலறினான்.
அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், எவ்வளவு முயன்றும் இட்லி தட்டு துளையில் சிக்கிய மகனின் கை விரலை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர்கள், தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சிறுவனுக்கு காயம் ஏற்படாமல் இரும்பு வெட்டும் கருவிகளை பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நுட்பமாக செயல்பட்டு இட்லி தட்டைப் பாதுகாப்பாக வெட்டி அகற்றினர்.
இதன் மூலம் சிறுவன் சித்தார்த்தின் கை விரலை எந்த காயமும் இன்றி பத்திரமாக மீட்டனர். பதற்றமான சூழலிலும் விரைந்து செயல்பட்டு சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பெற்றோரும், அந்த பகுதி பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.