4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளி உரிமம் ரத்து

சிறுமி இறந்த நிலையில், ஸ்ரீ மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
4 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்: பள்ளி உரிமம் ரத்து
Published on

மதுரை,

மதுரை கே.கே. நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் ப்ளே ஸ்கூல் என்ற இளம் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. உத்தங்குடி பகுதியைச் சேர்ந்த அமுதன்-சிவஆனந்தி தம்பதியரின் மகள் ஆருத்ரா (4). இந்த குழந்தையும் கோடைகால பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தாள். நேற்று காலையில் ஆருத்ராவை பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு அமுதன் வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர், பள்ளி வளாகத்தில் ஆருத்ரா, சக குழந்தைகளுடன் விளையாடினாள்.

பள்ளி வளாகத்தின் பின்பகுதியில் 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியின் அருகே குழந்தைகள் விளையாடினர். அப்போது, தொட்டியின் மூடி சரியாக மூடாமல் இருந்ததால், அந்த இடைவெளியில் குழந்தை ஆருத்ரா திடீரென தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடினாள். இதைக்கண்ட மற்ற குழந்தைகள் உடனடியாக பள்ளி ஆசிரியைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு, அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தை ஆருத்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், மதுரை மாநகர துணை கமிஷனர் அனிதா தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் ஆசிரியைகள், பள்ளிக்கூட பணியாளர்கள் என 7 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஆர்.டி.ஓ. ஷாலினி தலைமையில் அதிகாரிகள் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின்னர், அந்த மழலையர் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மதுரை கே.கே.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி இறந்த நிலையில், ஸ்ரீ மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி மழலையர் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்து மதுரை மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். முன்னதாக 4 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்ததால் பள்ளி உரிமையாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com