முக்கொம்பு அணையில் 40 % சீரமைப்பு பணிகளே முடிந்துள்ளன; ஆய்வுக்கு பின் மு.க. ஸ்டாலின் பேட்டி

முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் நடந்து வரும் சீரமைப்பு பணிகள் 40 சதவீதம் அளவிற்கே முடிந்துள்ளன என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக்கொம்பு அணையில் 40 % சீரமைப்பு பணிகளே முடிந்துள்ளன; ஆய்வுக்கு பின் மு.க. ஸ்டாலின் பேட்டி
Published on

திருச்சி,

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆறு மூலம் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் மேலணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் உபரிநீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொள்ளிடம் அணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன. இவற்றில் 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து உடைந்த பகுதியை தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிக்காக ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் இரவு, பகலாக 800 தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி நாமக்கல் செல்லும் சாலையை பயன்படுத்த முடியாத மோசமான நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், மதகுகள் உடைந்த பகுதிகளில் தொடர்ந்து மணல் மூட்டைகளை அடுக்கும் பணி நடந்து வருகிறது.

முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, எம்.பி. சிவா, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு உள்ளிட்டோர் சென்றனர்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, முக்கொம்பு அணையில் ஆய்வு எதுவும் செய்யாமல் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டு உள்ளது.

அணையில் முறையாக முன்பே ஆய்வு செய்து நீர் திறந்து விடப்பட்டு இருந்தால் அணையின் மதகுகள் உடைந்திருக்காது. அரசின் அலட்சியத்தினால் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதகுகள் சீரமைப்பு பணிகள் 40 சதவீதம் அளவிற்கே நிறைவடைந்து உள்ளன என கூறினார்.

இதேபோன்று அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு சென்றடையவில்லை என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com