என்ஜினீயரிங் மாணவியை விரட்டி, விரட்டி காதலித்து தொல்லை-கொலை மிரட்டல் - 40 வயது தனியார் நிறுவன ஊழியர் கைது

சென்னையில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவியை விரட்டி, விரட்டி காதலித்து தொல்லை கொடுத்த 40 வயது தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
என்ஜினீயரிங் மாணவியை விரட்டி, விரட்டி காதலித்து தொல்லை-கொலை மிரட்டல் - 40 வயது தனியார் நிறுவன ஊழியர் கைது
Published on

சென்னையில் 4-வது ஆண்டு என்ஜினீயரிங் படிக்கும் மாணவி ஒருவர் கோட்டூர்புரம் போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

வேணுகோபால் என்பவர் என்னை அடிக்கடி பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறி தொல்லை கொடுக்கிறார். நானும் கோட்டூர்புரம் பகுதியில் தங்கி உள்ளேன். அவரும் கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கிறார். அவரது மனைவி இறந்து விட்டதாகவும், ஒரு குழந்தை இருப்பதாகவும், என்னை திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொல்கிறார். அவருக்கு 40 வயது என்கிறார். இந்த விவரங்களை நான் அவரிடம் கேட்கவில்லை. அவராகவே இதை என் பின்னால் வந்து ஒப்பிக்கிறார். சில நேரம் நடந்து என் பின்னால் வருவார். சில சமயம் மோட்டார் சைக்கிளில் மெதுவாக என்னை பின்தொடர்வார். நான் அவரது காதலை ஏற்கவில்லை.

கடந்த 5 மாதங்களாக எனக்கு இந்த காதல் தொல்லை நீடிக்கிறது. சமீபத்தில் காந்தி மண்டபம் அருகே நான் நடந்து வரும் போது, என் பின்னால் வந்த அவர் திடீரென்று எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவரை திருமணம் செய்து கொள்ளா விட்டால், என்னை தீர்த்துக்கட்டி விடுவாராம். ஆபாசமாகவும் என்னை திட்டினார். ஆபாசமாக செய்கை மூலமும் ஏதேதோ சொல்கிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம், என்றும் அஞ்சுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வேணுகோபால் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வேணுகோபால் கைது செய்யப்பட்டார். பி.காம். பட்டப்படிப்பு படித்துள்ள அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். போலீஸ் விசாரணையில், புகார் கொடுத்துள்ள மாணவியை உயிருக்கு, உயிராக காதலிப்பதாகவும், தன்னை எவ்வளவு உதாசீனப்படுத்தினாலும், தன்னால் அந்த மாணவியை மறக்க முடியவில்லை, என்றும் வேணுகோபால் கூறினாராம்.

வேணுகோபால் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார், என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com