

திருச்சி,
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து இன்று மதுரை, திருச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்படி திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 400 புதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து திருச்சி பேருந்து நிலையம் அருகே கொரோனா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டுள்ள திருமண மண்டபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட உள்ளார்.