

நீலகிரி,
கோத்தகிரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 4 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால், வடகிழக்கு பருவமழை பெய்யும் போது மண் சரிவு, நிலச்சரிவு, மரங்கள் விழுவது உள்ளிட்ட பேரிடர் ஏற்பட்டு வருகிறது. எனவே, பருவமழையின் போது பேரிடரை சமாளிக்கும் வகையில், அனைத்துத்துறை அதிகாரிகளை கொண்ட முன்னணி களப்பணியாளர்களை உள்ளடக்கிய குழுக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சி நிர்வாகம் ஆகிய துறைகள் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்கும். இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து கடந்த வாரம் நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை சார்பில், நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபடாமல் இருக்கவும், தடுப்புச்சுவர்கள் இடிந்தால் குடியிருப்புகள் பாதிக்காமல் இருக்கவும், தற்காலிக தடுப்புச்சுவர்கள் அமைக்க வேண்டி 4 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு அலுவலக வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயபிரகாஷ், செயற் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கூறுகையில், பருவமழையை சமாளிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 4 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. இதுமட்டுமின்றி சாலையோர மழைநீர் கால்வாய்களில் அடைப்பை அகற்றும் பணி, சாலையோர புதர்களை வெட்டி அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றும் வகையில் மின்வாள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள், மண்சரிவு ஏற்பட்டால் அதனை அப்புறப்படுத்த பொக்லைன் எந்திரம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளது என்றனர்.