மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் சாமி தரிசனம்!

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம், கடந்த 17-ந்தேதி அன்று காலை 7:40 மணி முதல் 8:10 மணி வரையிலான சுப முகூர்த்த வேளையில் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் சாமி தரிசனம்!
மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த போது எடுத்த படம்.
Published on: 

மதுரை,

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அண்மையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து, ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.

கும்பாபிஷேக விழா

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ந்தேதி அன்று பெரும் விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இதற்கென வைகை ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மற்றும் கங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரைக் கொண்டு யாகசாலை பூஜைகள் கடந்த 11-ந்தேதி தொடங்கப்பட்டது.

கோவிலில் குவிந்த பக்தர்கள்

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம், கடந்த 17-ந்தேதி அன்று காலை 7:40 மணி முதல் 8:10 மணி வரையிலான சுப முகூர்த்த வேளையில் நடைபெற்றது. கோவில் விமானங்களுக்கும், 14 ராஜகோபுரங்களுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மற்றும் பாசுரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வைக் காண்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்தும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.

40 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட 15 நாட்கள் சிறப்பு மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருவதால், கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 40 ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி, பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்காகக் கோவில் நிர்வாகமும், மாநகர போலீசாரும் இணைந்து விரிவான பாதுகாப்பு மற்றும் சிறப்பு வழித்தட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com