41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்; அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு

சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயம்; அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் பழமையான சாமி சிலைகள் பல கொள்ளையடிக்கப்பட்டு சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது.

இந்த வகையில் சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 41 வழக்குகளின் புலன்விசாரணை விவர ஆவணங்களை (கேஸ் டைரி) காணவில்லை. இதனால், அந்த வழக்குகள் கைவிடப்பட்டு விட்டன. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளனர். பொதுவாக மிகமுக்கிய நபர்கள் தொடர்புள்ள சிலை கடத்தல் வழக்குகளை இப்படித்தான் போலீசார் முடித்து வைத்து விடுகின்றனர்.

உதாரணத்துக்கு திருச்செந்தூரில் பல ஆண்டுகளுக்கு முன்பு வைரவேல் திருடப்பட்டது. செயல் அதிகாரி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நீதிபதி பால் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால், தமிழக அரசு இந்த பரிந்துரையை ஏற்கவில்லை.

மாறாக, வைரவேல் மீண்டும் கோவில் உண்டியலில் போடப்பட்டு விட்டது. செயல் அதிகாரி தற்கொலை தான் செய்து கொண்டார் என்று கூறி வழக்கை முடித்து வைத்து விட்டது. ஆனால் வைரவேலை உண்டியலில் போட்டது யார்? என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இதுபோல முக்கிய பிரமுகர்களின் வழக்குகள் இழுத்து மூடப்பட்டு விடுகிறது.

ஒரு வழக்கின் புலன்விசாரணை விவர ஆவணம் (கேஸ் டைரி) சம்பந்தப்பட்ட புலன் விசாரணை அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கும். அவை காணவில்லை என்றால், அது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர் அதிகாரிகளுடன், விசாரணை அதிகாரிகள் கூட்டு சேர்ந்து சிலை கடத்தல் வழக்குகளை மூடி மறைக்கின்றனர். இதன்மூலம் அந்த வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். இதற்காக பெரும் தொகையை லஞ்சமாக அதிகாரிகள் பெறுகின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த, பாண்டியர் கால நடராஜர் சிலை, பல ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது. சுமார் 9 அடி உயரம் உள்ள அந்த சிலை, தற்போது ஆந்திராவில் உள்ளது. இந்த சிலை திருட்டு தொடர்பான வழக்கின் புலன் விசாரணை ஆவணம் மாயமாகி விட்டது என்று கூறி, வழக்கை போலீசார் கைவிட்டு விட்டனர். இதுபோல தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட விலை மதிக்க முடியாத சிலைகள் எல்லாம் தற்போது வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ளன.

எனவே, வழக்கு ஆவணங்கள் மாயமானது குறித்து பதவியில் உள்ள அதிகாரி விசாரித்தால், அவரால் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக நேர்மையாக நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற நேர்மையான அதிகாரி ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

அவரது விசாரணையை இந்த ஐகோர்ட்டு மேற்பார்வையிட வேண்டும். புலன்விசாரணை ஆவணங்களை காணவில்லை என்று கூறி இந்த 41 வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வர தமிழக டி.ஜி.பி.க்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர், சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் புலன் விசாரணை ஆவணங்கள் மாயமானது குறித்து தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற மார்ச் 31-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com