

ஈரோடு,
கோவை-சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஓசி பயணம் செய்த 411 பேரிடம் இருந்து ரூ.3½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோவையில் இருந்து, அசாம் மாநிலம் சில்சார் வரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 15627) இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு. சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக செல்லும் இந்த ரெயிலில், முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பலர் பயணம் செய்வதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சேலம் ரெயில்வே கோட்ட வணிக பிரிவை சேர்ந்த 19 டிக்கெட் பரிசோதனை பணியாளர்கள் மற்றும் 5 ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கோவை -சில்சார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிர டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டனர். இதில் ரெயிலில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த 80-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத பயணிகள் கீழே இறக்கப்பட்டு, பொதுப்பெட்டிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் டிக்கெட் இல்லாமலும், முறையான அனுமதியின்றியும் பயணம் மேற்கொண்ட 411 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து ஓசி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 68 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்று தீவிர டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.