கோவையில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரம்: பள்ளி ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல் நலன் பாதிக்கப்பட்டனர்.
கோவையில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் உடல் நலன் பாதிக்கப்பட்ட விவகாரம்: பள்ளி ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
Published on

கோவை,

கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு 408 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. தினமும் 384 மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 31 மாணவர்கள், 13 மாணவிகள் என 44 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட 44 மாணவ-மாணவிகளையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்று மாலையில் அனைத்து மாணவ-மாணவிகளும் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரன் மற்றும் மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது மாணவ- மாணவிகள் சாப்பிட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடப்பதை பார்த்தனர். பல்லி விழுந்ததை கவனிக்காமல், உணவை சத்துணவு ஊழியர்கள் பரிமாறியதால், அதை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

மதிய உணவு தயாரிப்பில் அஜாக்கிரதையாக இருந்த ஊழியர்களிடம் மாநகராட்சி பள்ளி முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் அந்த பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் கவுசல்யா, சமையலர் மனோகரி, சமையல் உதவியாளர் ஜெயா கமலம் ஆகிய 3 பேரை சஸ்பெண்ட் செய்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று மாநகராட்சியின் வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த ஊழியர்கள் கவுண்டம்பாளையம் பள்ளியில் பணியமர்த்தப்பட்டு சமையல் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com