44 ஆயிரம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் தேர்வு எழுதினர் 35 சதவீதம் பேர் வரவில்லை

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர் பணிகளுக்கான அரசு தேர்வை 44 ஆயிரம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் எழுதினர். 35 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.
44 ஆயிரம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் தேர்வு எழுதினர் 35 சதவீதம் பேர் வரவில்லை
Published on

சென்னை,

தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பஞ்சாயத்துகளில் 330 என்ஜினீயர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. மொத்தம் 68 ஆயிரத்து 308 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 67 ஆயிரத்து 795 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். 513 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தகுதியான நபர்களுக்கு நேற்று தேர்வு நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை, சிதம்பரம், வேலூர், ராமநாதபுரம், நாகர்கோவில், காஞ்சீபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, ஊட்டி ஆகிய 15 நகரங்களில் பல்வேறு மையங்களில் தேர்வு நடந்தது. காலையிலும், மாலையிலும் தேர்வு நடந்தது.

இந்த தேர்வை சிவில் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பட்டதாரிகள் எழுதினார்கள். தேர்வு அப்ஜெக்டிவ் (ஒரு கேள்விக்கு ஒரு சரியான பதில் உள்பட 4 பதில்கள்) முறையில் நடத்தப்பட்டது. காலையில் நடந்த தேர்வில் 200 வினாக்களும், மாலையில் நடந்த தேர்வில் 100 வினாக்களும் கேட்கப்பட்டன.

இந்த தேர்வை 65 சதவீதம் பேர்(44,067) மட்டுமே எழுதினார்கள். தேர்வு எழுத தகுதி பெற்ற என்ஜினீயரிங் பட்டதாரிகளில் 35 சதவீதம் பேர் (23,728) தேர்வு எழுத வரவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com