

சென்னை,
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சூளைமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தினர். அந்த ஆட்டோவில் மூட்டைகள் இருந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த மூட்டைகளை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை பாக்கெட்டு பண்டல்கள் இருந்தது.
ஆட்டோவை ஓட்டி வந்த கொடுங்கையூர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர், குட்கா வியாபாரிகள் கூறியதன்பேரில் சரக்கு வாகனத்தில் இருந்து ஆட்டோ மூலம் குட்கா பாக்கெட்டுகளை சப்ளை செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அதில் மொத்தம் 445.5 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள், ஆட்டோ மற்றும் சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான வெற்றிவேல் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஏற்கனவே குட்கா வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள குட்கா வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.