44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னையில் நாளை ஜோதி ஓட்டம் - போக்குவரத்து மாற்றம்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னையில் நாளை ஜோதி ஓட்டம் நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னையில் நாளை ஜோதி ஓட்டம் - போக்குவரத்து மாற்றம்
Published on

இதுக்குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 27-ந்தேதி (நாளை) மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம் வரை ஜோதி ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த ஜோதி ஓட்டம் மாநிலக்கல்லூரி மைதானத்தில் தொடங்கி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை கொடிமரச் சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்டிரல் சதுக்கம், ஈ.வெ.ரா.சாலை, ராஜாமுத்தையா சாலை வழியாக உள்விளையாட்டு அரங்கத்தை அடைய உள்ளது.

எனவே சென்னை போக்குவரத்து போலீசாரால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டத்தை அதற்கேற்ப வடிவமைத்துக்கொள்ள வேண்டும். மேலும் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வர திட்டமிட்டு உள்ளவர்கள் சற்று முன்பாகவே தங்களுடைய பயண நேரத்தை வடிவமைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com