

சென்னை,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 177.17 கோடி ரூபாய் செலவில் 35 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 32.23 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 2.50 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கட்டடத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 16.49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 25.79 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 11.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1 புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டி, நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் அலுவலக பயன்பாட்டிற்காக 3.28 கோடி ரூபாய் மதிப்பிலான 28 வாகனங்களை முதல்-அமைச்சர் வழங்கினார்.
முடிவுற்ற பணிகள்:-
ஒசூர், தாம்பரம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாநகராட்சிகளில், 70.59 கோடி ரூபாய் செலவில், முதல்வர் படைப்பகங்கள், வணிக வளாகங்கள், வகுப்பறைகள், அறிவியல் பூங்காக்கள், நவீன பேருந்து நிலையங்கள், நவீன குப்பை மாற்று நிலையம், குடிநீர் விநியோக குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள்;
திருக்கோவிலூர், கோட்டகுப்பம், அரக்கோணம், மயிலாடுதுறை, திருவையாறு, திருச்செந்தூர், மதுக்கரை, திருமுருகன்பூண்டி, இராசிபுரம், குளித்தலை, தாரமங்கலம், இடைப்பாடி, கொமாரபாளையம் ஆகிய நகராட்சிகளில் 106.58 கோடி ரூபாய் செலவில் பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், வகுப்பறைகள், பேருந்து நிலையங்கள், மினி மார்கெட் கட்டடங்கள், வாரச் சந்தை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகள் என மொத்தம் 177 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 35 முடிவுற்ற பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
பேரூராட்சிகளின் இயக்குநரகத்தில் முடிவுற்ற பணிகள்;-
எழுமலை, சேத்தூர் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகளில் 6 பொது, துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம், கொரடாச்சேரி மற்றும் புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சிகளில் 2 குடிநீர் அபிவிருத்தி பணிகள், என மொத்தம் 32.23 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் முடிவுற்ற பணி:-
மணலி மண்டலம், சின்ன சேக்காடு, தேவராஜன் தெருவிலுள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளிக் கட்டடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்:-
கோடம்பாக்கம் மண்டலம், காமராஜ் காலனியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 7 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள்; சோழிங்கநல்லூர் மண்டலம், எழில் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு 8 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பிரத்யேக பிரதான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள்;
மணலி மண்டலம், மணலி புது நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு 10 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 0.75 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் என மொத்தம் 25.79 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டுதல்:-
சோளிங்கர் நகராட்சி, கொண்டபாளையம் பகுதியில் 11 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்:-
பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியில், சோழிங்கநல்லூர் மண்டலம், கண்ணகி நகர், 2ஆவது பிரதான சாலையிலுள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் 2.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் உள்ளடக்கிய பள்ளிக் கட்டடம் மற்றும் சத்துணவுக் கூடம் கட்டும் பணி; சோழிங்கநல்லூர், விவேகானந்தர் தெருவிலுள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் 1.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய பள்ளிக் கட்டடம் கட்டும் பணி;
செம்மஞ்சேரி, சென்னை நடுநிலைப் பள்ளியில் 9.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 வகுப்பறைகள், 3 பணியாளர்கள் அறை, 2 கணினி ஆய்வகங்கள் மற்றும் அரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய பள்ளிக் கட்டடம் கட்டும் பணி; திரு.வி.க.நகர் மண்டலம், பாஷ்யம் 1ஆவது தெருவிலுள்ள 1.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிக்கிள்பால் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணி மற்றும் தேனாம்பேட்டை மண்டலம், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சாலை விளையாட்டுத் திடலில் 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சிக் கூடம் என மொத்தம் 16.49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் அலுவலக பயன்பாட்டிற்காக வாகனங்கள் வழங்குதல்:-
2 மாநகராட்சிகள், 7 நகராட்சிகளின் அலுவலர்கள் மற்றும் நகரமன்ற தலைவர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 3.28 கோடி ரூபாய் மதிப்பிலான 28 புதிய வாகனங்களை வழங்கிடும் விதமாக அவ்வாகனங்களுக்கான சாவிகளை முதல்-அமைச்சர் ஓட்டுநர்களிடம் வழங்கினார்.