கஜா புயலுக்கு 45 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது; முதல் அமைச்சர் அறிக்கை

கஜா புயலுக்கு 45 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கஜா புயலுக்கு 45 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது; முதல் அமைச்சர் அறிக்கை
Published on

சென்னை,

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி முதல் அமைச்சர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

இந்த அறிக்கையில், கஜா புயலால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

புயலுக்கு முன்பே 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கஜா புயலில் 1.70 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்படுகின்றன. 347 டிரான்ஸ்பர்மர்கள், 39938 மின் கம்பங்கள், 3559 கி.மீ நீள மின் வடங்கள் புயலால் பாதிப்படைந்து உள்ளன. 102 மாடுகள், 633 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம், ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நிவாரண பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

புயல் ஏற்படுத்திய விளைபயிர் பாதிப்பு பற்றி கணக்கிட்டு தகுந்த நிவாரணம் வழங்கப்படும். இதுவரை 56,942 குடிசை வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 30,328 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

மின் விநியோகம் சீரமைக்கும் பணியில் 12,532 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். சேதமடைந்த வீடுகளுக்கும் உரிய நிவாரண உதவி வழங்கப்படும். புதுகோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கூடுதலாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

பயிர் சேத விவரங்களை கணக்கிட்டு உடனடியாக அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்கப்படும். மீன்வள துறை கணக்கீடு செய்து அறிக்கை தந்தபின்னர் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

பொதுமக்களுக்கு எந்தவித தொற்றுநோயும் ஏற்டாமல் தடுக்க பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த புயலில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com