கறம்பக்குடி அருகே ஜல்லிகட்டு போட்டி 45 பேர் காயம்

காளைகளை அடக்க முயன்றதில் மாடுபிடி வீரர்கள் 45 பேர் காயம் அடைந்தனர்
கறம்பக்குடி அருகே ஜல்லிகட்டு போட்டி 45 பேர் காயம்
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே தச்சங்குறிச்சி, வன்னியன் விடுதி, திருமயம் குலமங்கலம் ஆகிய பகுதிகளில் ஜல்லிகட்டு நடைபெற்று முடிந்த நிலையில் 4 -வதாக கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் கிராமத்தில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது.

இதில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை மட்டும் அல்லாமல் திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. மொத்தம் 716காளைகள் 300மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இதைதொடர்ந்து காலை 7.30 மணிக்கு ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. இதனை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லபாண்டியன் மற்றும் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

ஜல்லிகட்டில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வட்டார மருத்துவ அதிகாரி பஜ்ருல் அகமது தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகே தயார்நிலையில் இருந்தனர். 3ஆம்புலன்சுகளும் நிறுத்தபட்டிருந்தது. ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரெண்டு வடிவேல் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜல்லிகட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்ககாசு, வெள்ளிகாசு, கட்டில், சைக்கிள், மின்விசிறி, மிக்ஸி, டி.வி., ரொக்க பணம் என ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

காளைகளை அடக்க முயன்றதில் மாடுபிடி வீரர்கள் 45 பேர் காயம் அடைந்தனர். இதில் படுகாயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மதியம் 2.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com