திருப்பத்தூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை - பெண் உள்பட 2 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
திருப்பத்தூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை - பெண் உள்பட 2 பேர் கைது
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு 3-வது தெருவைச் சேர்ந்தவர் மனோகர். அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தனது மனைவி சித்ராவுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் மகனைப் பார்க்க மனோகர் - சித்ரா தம்பதியினர் சென்னைக்கு சென்றிருந்தனர்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து சித்ராவிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னையில் இருந்து விரைந்து வந்த தம்பதியினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 45 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கர்நாடக மாநிலம் முள்பாகல் பகுதியைச் சேர்ந்த சின்னப்பா மகன் நாகராஜ் என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட நகைகளை முள்பாகல் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி (24) மற்றும் ராகுல் ஆகியோரிடம் விற்பனைக்காக கொடுத்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, நாகராஜ் மற்றும் வைஷ்ணவியை கைது செய்த தனிப்படை போலீசார், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராகுலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com