சாலையில் கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சாலையில் கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சாலையில் கிடந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

ரேஷன் அரிசி பறிமுதல்

திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே மலைக்கோவில் ராஜவீதி சாலையில் 9 மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, சாலையில் மட்டுமின்றி அருகே உள்ள வீட்டிலும் அரிசி மூட்டைகள் இருந்தன.

அந்த வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தபோது, மர்ம நபர்கள் கேட்டை திறந்து வீட்டிற்குள் மூட்டைகளை போட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து 9 மூட்டைகளில் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கதவில் மோதியவர் சாவு

*தா.பேட்டைய அடுத்த வாளசிராமணி ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 39). இவர் நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்தபோது தடுமாறி கதவில் மோதியதில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உடலை போலீசாருக்கு தெரிவிக்காமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதையறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து தா.பேட்டை போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகையநல்லூர் இளங்கோ தெருவை சேர்ந்த முத்துச்சாமி (75) காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவரை, பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மயான பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

*மருங்காபுரி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று மருங்காபுரி தாசில்தார் செல்வசுந்தரி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர். முன்னதாக ஆக்கிரமிப்பை அகற்றும்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

*திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி, வீட்டின் அருகில் உள்ள 17 வயதுடைய பிளஸ்-2 மாணவருடன் பழகியுள்ளார். இதில் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து குழந்தைகள் நல குழுமத் தலைவர் மோகன் அளித்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர். சிறுமி காப்பகத்தில் உள்ளார்.

பள்ளியில் மாணவரை தாக்கியவர் கைது

*மணப்பாறை அருகே கூடத்திப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் மாலை நேர வகுப்பு நடந்தது. அப்போது அங்கு வந்த ஒரு மாணவியின் தந்தையான வின்சென்ட் ராஜ் என்பவரிடம், அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவர், அந்த மாணவியின் பெயரைக் கூறி நீங்கள் அவரது அப்பாவா என்று கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த வின்சென்ட் ராஜ், அந்த மாணவரை திட்டி தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வின்சென்ட் ராஜை கைது செய்தனர்.

*முசிறியை அடுத்த பாப்பாபட்டி அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர்(38). கொத்தனாரான இவர் கடன் தொல்லையால் தும்பலம் வனப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தான் தற்கொலை செய்யப்போவதாக செல்போனில் உறவினரிடம் கூறியதோடு, வாட்ஸ்-அப்பிலும் தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com