

சென்னை,
தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான நெல்லை மற் றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சமீபகாலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் தற்போது வரை நெல்லை மாவட்டத்தில் 19 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதில் ஒரு இரட்டை கொலை சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதனால் மொத்தம் 20 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய வெறியாட்டத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் தாக்கம் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிலும் எதிரொலித்தது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஆண்டில் 26 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. குடும்பத்தகராறு, முன்விரோதம், தொழில் போட்டி, கும்பல் மோதல், காதல் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த கொலைகள் நடைபெற்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகின்றன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் ரவுடி கும்பல்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இரவு நேரங்களில் தனியாக செல்ல மக்கள் அச்சப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களில் பெரும்பாலான வழக்குகளில் இளஞ்சிறார்கள் சம்பந்தப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.
சமீபத்தில் மானூர் போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட புறக்காவல் நிலையத்தில் சிறுவர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது. சிறிய தகராறுகள் கூட கொலை சம்பவங்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் வன்முறை மனப்பான்மை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே போலீசாரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம், இரவு ரோந்து வாகன சோதனை, ரவுடிகள் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சற்று குறைந்திருந்த கொலை சம்பவங்கள் மீண்டும் தொடர்ந்து நடைபெறுவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்கள் கொலை நகரமாக மாறுகிறதா? என்ற அச்சம் மக்களி டையே உருவாகியுள்ளது.
சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்த வேண்டும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளும் இளைஞர்களை வன்முறையிலிருந்து மாற்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தி வருகின்றன.