மாநிலம் முழுவதும் ஏரி, குளங்களில் 4,862 அரசு கட்டிடங்கள் ஐகோர்ட்டில் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல்

மாநிலம் முழுவதும் எரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் 4,862 அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மாநிலம் முழுவதும் ஏரி, குளங்களில் 4,862 அரசு கட்டிடங்கள் ஐகோர்ட்டில் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஏராளமான வழக்குகள் ஐகோர்ட்டில் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

இதன்படி தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் அந்த அறிக்கையில் முழு விவரங்கள் இல்லை என்று கூறி தலைமை செயலாளரை இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் கடந்த 8-ந் தேதி உத்தரவிட்டனர்.

விலக்கு

இந்த நிலையில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தலைமைச் செயலாளர் இறையன்பு கடந்த மே மாதம்தான் பதவியேற்றார். தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த்துறை சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களை முழுமையாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.

தாலுகா வாரியாக

இதன் பின்னர் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து தலைமைச் செயலாளர் சார்பில் புதிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதமே தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நீர்நிலைகள் குறித்த புள்ளிவிவரங்களை காண தமிழ் நிலம் என்ற இணையதளத்தில், அனைத்து நீர் நிலைகளின் விவரங்களும் தாலுகா வாரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்த பட்டியலை போர்க்கால அடிப்படையில் தயாரித்து, அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.

நீர்நிலைகளில் அரசு அலுவலகங்கள்

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

4 ஆயிரத்து 862 அரசு கட்டிடங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கட்டப்பட்டுள்ளன. அதேபோல நீர்நிலைகளை ஆக்கிரமித்து 8 ஆயிரத்து 796 வணிக கட்டிடங்களும், 3.20 லட்சம் குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. நீர்நிலைகளை எல்லாம் ஜி.பி.எஸ்.கருவி மூலம் நேரடியாக அளவீடு செய்வதற்கு 12 மாதங்கள் தேவைப்படும்.

1905-ம் ஆண்டு தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த காலத்தில், நிலம் ஆக்கிரமிப்பு என்பது விவசாயத்திற்காக மட்டுமே நடந்தது. தற்போதுள்ள நவநாகரிக காலத்தில் குடியிருப்புகள், வணிகவளாகம் உள்ளிட்டவைகளுக்காகவும் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

சட்டத்திருத்தம்

எனவே, 1905-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.

அதாவது நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், அகற்றவும் வருவாய்த்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் விதமாக சட்டத்திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டத்தில் பிரிவுகள் சேர்க்கப்படும். இதன் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் காலதாமதம், மேல்முறையீடு, மறுஆய்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் எல்லாம் தவிர்க்கப்படும். இந்த சட்ட முன்வடிவு, எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்.

இன்று விசாரணை

ஆக்கிரமிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே வலுவான ஒரு செய்தியை ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று (வியாழக்கிழமை) விசரணைக்கு வர உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com