48-வது நாளாக நீடிக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் ஆதரவு

48-வது நாளாக நீடிக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். #Sterlite #Sterliteprotest
48-வது நாளாக நீடிக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் ஆதரவு
Published on

தூத்துக்குடி

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48-வது நாளாக நீடிக்கிறது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஏராளமான நோய்களும் உருவாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 48-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுவதோடு வீடுகளுக்கு செல்லாமல் அங்கேயே உறங்கி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

அவர்களது போராட்டத் துக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று முன்தினம் முதல் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சி நிறுவனர் பொன்ராஜ் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அங்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, 'தமிழ் நாட்டில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட 159 ஆலைகளில் முறையான சுத்திகரிப்பு இல்லை. ஸ்டெர்லைட் ஆலை யில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் தமிழ்நாடு அரசு உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்வோம்' என்று கூறினார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களை ச.ம.க. தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார். இதற்காக இன்று பகல் 10.30 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் அங்கிருந்து நேராக அ.குமரெட்டியாபுரம் சென்றார். அங்கு பொது மக்களிடம் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள தீங்குகள் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும் ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

22 ஆண்டாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். இந்த ஆலையை மூட முடியவில்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியமும், அரசும் ஆலைக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். போபால் விஷவாயு தாக்கிய சம்பவத்திற்கு பின்னர் அங்கு 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டால் இதன் பாதிப்பு அதிகமாகும். எனவே அரசு மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

X

Daily Thanthi
www.dailythanthi.com