

புதுடெல்லி,
திருமணத்தை போன்ற தன்மையுடைய லிவ்-இன் உறவுகளுக்கும் இந்திய தண்டனை சட்டத்தின் 498ஏபிரிவின் பாதுகாப்பு பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் ஒருவருடன் லிவ்-இன் உறவில் இருந்த போது, அவர் தனது முந்தைய திருமணத்தை மறைத்து தன்னிடம் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகவும், உடல்ரீதியான காயம் ஏற்படுத்தியதாகவும் கூறி 498ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.
நாங்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் இந்த சட்டம் என் மீது பாயாது" எனக் கூறி அந்த நபர் கர்நாடக ஐகோர்ட்டில் அந்த பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரினார். ஆனால், கர்நாடக ஐகோர்ட்டு அந்த நபரின் கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நோங்மெய்கபம் கோதிஸ்வர் சிங் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
அதில், திருமணம் செய்துகொள்ளும் நோக்கம் நிரூபிக்கப்பட்டு 'லிவ்-இன்' உறவில் இருப்பவர்களுக்கு இந்த உத்தரவு கண்டிப்பாகப் பொருந்தும்.
இதன் பொருள், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498ஏ-இன் கீழ், அதன் வரம்பு லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்குக் கொடுமை நேர்ந்தால் அதற்கு எதிரான பாதுகாப்பு கிடைப்பதைப் போன்றே, திருமண உறவைப் போன்ற லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு அத்தகைய பாதுகாப்பு கிடைக்காமல் போவது அரசியலமைப்புக்கு முரணானது.அது அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறுவதாகும்.
கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினரால் மனரீதியான, உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவது அல்லது அப்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டுதல் போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதே சட்டப்பிரிவு 498ஏ-வின் நோக்கமாகும். இந்த நிலையில், அதுபோன்ற துன்புறுத்தல்கள் திருமணத்திற்குப் பின் மட்டுமே நிகழும், அதற்கு முன் நிகழாது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் என்பதே எங்களின் கருத்து.
திருமணம் செய்யும் நோக்கத்துடன் நீண்டகாலம் இணைந்து வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டால், கணவர் அல்லது அவரது குடும்பத்தினரின் கொடுமைக்கு எதிரான 498ஏ சட்டப் பாதுகாப்பை லிவ்-இன் உறவில் உள்ள பெண்களும் பெறலாம் என நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கினர்.