கூடுவாஞ்சேரி- செங்கல்பட்டு இடையே விரைவில் 4 வது ரெயில் பாதை: டெண்டர் வெளியீடு

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது புதிய ரெயில் பாதை திட்டத்தில், முதற்கட்டமாக கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரை ரூ.273 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி- செங்கல்பட்டு இடையே  விரைவில் 4 வது ரெயில் பாதை: டெண்டர் வெளியீடு
Published on: 

சென்னை,

தென்மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரெயில் பாதையாக சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு ரெயில் பாதை உள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்களும், 250-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்களும் இயக்கப்படுகின்றன.தற்போது, மூன்று பாதைகள் மட்டுமே உள்ளன. பொதிய ரெயில் பாதை இல்லாததால், ரெயில் சேவையை அதிகரிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. கூடுதல் ரெயில்களையும் இயக்க முடியாத நிலை உள்ளது.

இதனையடுத்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு நான்காவது புதிய ரெயில் பாதையை ரெயில்வேயுடன் இணைந்து அமைக்க, தமிழக அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த ரெயில் பாதை திட்டத்தை ரூ.1,165 கோடி செலவில் மேற்கொள்ள கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, தாம்பரம் - செங்கல்பட்டு நான்காவது புதிய ரெயில் பாதை திட்டத்தின் முதற்கட்டமாக, கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரை 273 கோடி ரூபாயில் பணிகளை மேற்கொள்ள டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது புதிய ரெயில் பாதைக்காக நிலம் கையகப்படுத்துவது போன்ற அடிப்படை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.2- கட்டமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் வரையிலான 9 கி.மீ. தூரத்தில் நான்காவது பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

விரைவில் இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும்.நான்காவது பாதை பயன்பாட்டுக்கு வந்தால் 25 சதவீதம் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும்” என்றார். கூடுதலாக ரெயில் இயக்கப்பட்டால் இதன் மூலம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பெரிதும் பலன் அடைவார்கள். பண்டிகை நாட்களில் கூடுதல் சிறப்பு ரெயில்களையும் இயக்க முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com