

பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன்கள் அபி(வயது 11), அஸ்வத்(4). இந்த நிலையில் அஸ்வத் நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென அவனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.
இது குறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை கீழக்கொல்லையில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் சிறுவன் அஸ்வத் ரத்தக்காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டான்.
போலீஸ் விசாரணையில், சிறுவன் வீட்டின் அருகில் வசித்து வரும் முருகவேல் மகள் ரஞ்சிதா(வயது 25) என்பவர், அஸ்வத்தை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சிதாவை போலீசார் கைது செய்தனர். போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது பெற்றோருக்கும், அஸ்வத்தின் பெற்றோருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதற்கு பழிவாங்குவதற்காக சிறுவன் அஸ்வத்தை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சிறுவனை முந்திரிதோப்புக்குள் அழைத்துச்சென்றேன். அங்கு அவனது முகத்தை தரையில் அழுத்தி, தேய்த்தேன். இதில் அவனது முகத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் கழுத்தை நெரித்து சிறுவன் அஸ்வத்தை கொலை செய்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.