10-ம் வகுப்பு தேர்வு: 5 இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்த ருசிகரம்

10-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது.
10-ம் வகுப்பு தேர்வு: 5 இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்த ருசிகரம்
Published on

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை நடந்து முடிந்தது.

இந்த தேர்வை 4 லட்சத்து 36 ஆயிரத்து 120 மாணவர்கள், 4 லட்சத்து 35 ஆயிரத்து 119 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 பேர் எழுதி இருந்தனர். தேர்வு முடிவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டார்.

மாணவ-மாணவிகள் பள்ளிகளில் கொடுத்திருந்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு மதிப்பெண் அனுப்பப்பட்டன. இதுதவிர, www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, /results.digilocker.gov.in/ என்ற இணையதளங்கள் வாயிலாகவும் மாணவ-மாணவிகள் தேர்வு முடிவை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டன. அதிலும் ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் தேர்வு முடிவை பார்த்தனர்.

தேர்வு எழுதிய 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 பேரில், 4 லட்சத்து 78 மாணவர்கள், 4 லட்சத்து 17 ஆயிரத்து 183 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இதன் தேர்ச்சி சதவீதம் 93.80 ஆகும். மாணவர்களைவிட 4.14 சதவீதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2.25 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகும்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அந்தவகையில் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரையிலான தேர்ச்சி சதவீதம் முறையே 90.07 சதவீதம், 91.39 சதவீதம், 91.55 சதவீதம், 93.80 சதவீதம் ஆகும்

இந்தநிலையில் கோவை, மதுரை, சேலம், கோவில்பட்டியில் 10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து 5 இரட்டையர்கள் ஒரே மதிப்பெண்ணை எடுத்த ருசிகரம் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை

மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமரவேல். இவரது மகள்கள் மாயாஸ்ரீ, மகாஸ்ரீ இரட்டையர்களான இவர்கள் சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இரட்டையர்களான மாயாஸ்ரீ, மகாஸ்ரீ ஆகியோர் ஒரே மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். இதில் மாயாஸ்ரீ எடுத்த மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ் 96, ஆங்கிலம் 96,கணிதம் 95, அறிவியல் 95, சமூக அறிவியல் 93

மகாஸ்ரீ தமிழில் 98, ஆங்கிலம் 96, கணிதம் 92,அறிவியல் 94, சமூக அறிவியல் 95, இருவரின் மொத்த மதிபெண்களும் 475 ஆகும். 5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் ஒரே மதிப்பெண்ணாக 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மற்றொரு இரட்டைகள்:-

மதுரை மாவட்டம் மேலும் அருகே உள்ளது. கீழையூர் இந்த ஊரை சேர்ந்தவர் வைரவன் இவர் வட்டா காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி. இவரது மகன்கள் ராமநாதன்,லட்சுமணன் இருவரும் இரட்டையர்கள். இவர்கள் இருவரும் மேலும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். நேற்று வெளிவந்த மதிப்பெண் பட்டியலில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 5 பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கோவை:-

கோவையை சேர்ந்த இரட்டை சகோதிரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர் ராஜன் - பாரதி செல்வி தம்பதியர். இந்த தம்பதிக்கு கவிதா, கனிகா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள்.

இவர்கள் 2 பேரும் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் இரட்டை சகோதரிகள் 2 பேரும் ஒரே மாதிரியாக 474 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதில் கவிதா தமிழில் 95,ஆங்கிலம் 98,கணிதம் 94,அறிவியல் 89, சமூக அறிவியல் 95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

கனிகா தமிழில் 96, ஆங்கிலம் 97, கணிதம் 94, அறிவியல் 92, சமூக அறிவியல் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்கள் கணித பாடத்திலும் ஒரே மாதிரியாக மதிப்பெண்கள் எடுத்து உள்ளனர்.

தூத்துக்குடி:-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜுவ் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வக்கீல் சங்கர் கணேஷ். இவர் கோவில்பட்டி வக்கீல் சங்க தலைவராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி மீனா. இந்த தம்பதியின் மகன்கள் ஹரிகரன், செந்தில் நாதன் இந்த இரட்டை சகோதரர்கள் இருவரும் கோவில்பட்டியில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10- வகுப்பு பயின்றனர்.

நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் ஹரிஹரன், செந்தில்நாதன் இருவரும் தலா 457 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே மதிப்பெண்கள் எடுத்துள்ள இரட்டை சகோதரர்களை அப்பள்ளி நிர்வாகம் ஆசியர்கள், சக மாணவர்கள் பாராட்டினர்.

மாணவர் ஹரிஹரன் பாடவாரியாக தமிழில் 94, ஆங்கிலம் 91, கணிதம் 83, அறிவியல் 94, சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதே போன்று மாணவர் செந்தில் நாதன் பாடவாரியாக தமிழில் 83, ஆங்கிலத்தில் 91, கணிதத்தில் 93, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 90 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தாலும் வெவ்வேறு பிரிவுகளில் படித்தது குறிப்பிடத்தக்கது.

சேலம்:-

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் மணி - தீபா தம்பதியின் மகள்கள் இரட்டையர்கள். இவர்களது பெயர் இதழ்யா மற்றும் இதழ்யாதினி. 2 பேரும் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இரட்டை சகோதிரிகள் இருவரும் 475 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர். இதையடுத்து இருவரும் தமிழ் பாடத்தில் 97, ஆங்கில பாடத்தில் 98, அறிவியல் பாடத்தில் 94, என 3 பாடத்திலும் இருவரும் ஒரே மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளனர். இந்த சகோதரிகளுக்கு பெற்றோர் மற்றும் தோழிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com