நெல்லையில் போலீசாரை தாக்கி தனியார் சொத்துக்கள் சேதம்: 5 பேர் கைது

நெல்லையில் மகாதேவன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேலும் 8 பேரை திரட்டி, 3 பைக்குகளில் திசையன்விளை, இட்டமொழி பகுதிகளுக்குச் சென்று தொடர் சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
5 பேர் கைது
Published on

திருநெல்வேலி,

திசையன்விளை பகுதியில் போலீசாரை தாக்கியதோடு, தனியார் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் போலீசாரின் துரித நடவடிக்கையால் முக்கிய குற்றவாளி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசார் மீது தாக்குதல்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உட்கோட்டம், திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 24.7.2026 அன்று போலீசாரை தாக்கியதுடன், சொத்துக்களை சேதப்படுத்திய சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவிட்டார். இதனையடுத்து வள்ளியூர் உட்கோட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தனியார் சொத்துக்கள் சேதம்

விசாரணையில், முக்கிய குற்றவாளியான இசக்கிராஜா என்பவர் மேலும் 8 பேரை திரட்டி, 3 பைக்குகளில் திசையன்விளை மற்றும் இட்டமொழி பகுதிகளுக்குச் சென்று தொடர் சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் திசையன்விளையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் மீட்டரை அரிவாளால் சேதப்படுத்தியதுடன், இட்டமொழி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரையும் சேதப்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து, இட்டமொழி பகுதியில் ரூ.400-க்கு எரிபொருள் நிரப்பிய பின்னர், அங்குள்ள பெட்ரோல் பங்கின் பெட்ரோல் நிரப்பும் மீட்டரையும் அரிவாளால் சேதப்படுத்தினர். மேலும், இட்டமொழி சாலையில் ஒரு பயணிகள் ஆட்டோ மற்றும் 2 லோடு ஆட்டோக்களையும் சேதப்படுத்தினர்.

5 வழக்குகள் பதிவு

இந்த சம்பவங்கள் தொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

5 பேர் கைது

இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார் ஒருவர் உள்பட 4 பேர் முன்னதாகவே கைது செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்று தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் முக்கிய குற்றவாளியான மகாதேவன்குளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துராஜா(18), இசக்கிபாண்டி(23), சுயம்புராஜா(22), தாமரைசெல்வி பகுதியைச் சேர்ந்த சுடலைகண்ணு(23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை 10-ல் 9 பேர் கைது

இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 10 குற்றவாளிகளில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள ஒருவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com