நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது

நெல்லை மாநகரில் செல்போன், பணம் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஒரே குழுவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை மாநகரில், கடந்த 21.9.2025 அன்று பாளையங்கோட்டை, மனகாவலம்பிள்ளைநகரை சேர்ந்த ஒருவர் பாளை மார்க்கெட் தெப்பக்குளம் அருகில் வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கி செல்போனை பறித்தாக கொடுத்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பாளையங்கோட்டையைச் சேர்ந்த இசக்கிராஜா, மணிகண்டன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் 24.9.2025 அன்று திருநெல்வேலி மருத்துவமனை மருத்துக்கல்லூரி காவல் நிலைய எல்லையில் சமாதானபுரத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் அவரது இருசக்கர வாகனத்தினை பறித்து சென்றது சம்பந்தமாக அவரது புகாரின் பேரில் திருநெல்வேலி மருத்துவமனை மருத்துக்கல்லூரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 24.9.2025 அன்று பெருமாள்புரம் காவல் சரகம் கே.டி.சி.நகர் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி மாவட்டம், புளியங்குளத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் செல்போனை பறித்து சென்றது சம்பந்தமாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. 25.9.2025 அன்று பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனகாவலம்பிள்ளைநகரைச் சேர்ந்த ஒருவர் அண்ணா கீழத் தெருவில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கி செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்தாக கொடுத்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்சொன்ன வழக்குகள் தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் மேற்சொன்ன குற்றச்செயல்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் ஒரே குழுவினை சேர்ந்தவர்கள் என தெரியவந்த நிலையில் அவர்களில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த லிங்கதுரை, திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளத்தினைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ஜாபர்சாதிக் ஆகிய 3 பேரும் 27.9.25 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






