சேலத்தில் ரூ.13 கோடி வெள்ளிப்பொருட்கள் கொள்ளை: 5 பேர் கைது!

கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வெள்ளிப்பொருட்கள்
Published on: 

சேலம்,

சேலத்தில் ரூ.13 கோடி வெள்ளிப்பொருட்கள் கொள்ளையில் கோவையை சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கொள்ளை

சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயல்காடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். வெள்ளி வியாபாரியான இவர், அதே பகுதியில் தனது வீட்டின் அருகில் வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 12-ந் தேதி நள்ளிரவில் இவரது பட்டறைக்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரவு நேர காவலாளி வெங்கடேசன் என்பவரை தாக்கி கட்டிப்போட்டுவிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான 550 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.இது தொடர்பாக பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது.

கைது

இந்த நிலையில் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை தொடர்பாக நேற்று கும்பல் தலைவனான கோவையை சேர்ந்த அபிஷேக் (வயது 21) என்பவரை தஞ்சாவூரில் போலீசார் கைது செய்தனர். அவனுடைய கூட்டாளிகளான கோவையை சேர்ந்த ஸ்ரீதர் (20), ஞானபிரகாசம் (28), அண்ணா மலை (20), அருண்குமார் (29) ஆகிய 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து சேலத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கைதானவர்களிடம் கொள்ளை எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

பறிமுதல்

இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட 323 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய மங்கி குல்லாக்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதை போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு. துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, இந்த கொள்ளையில் கைதான அபிஷேக் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் இந்த கொள்ளையை அவர்கள் நோட்டமிட்டு தான் செயல்படுத்தி உள்ளனர். கொள்ளைக்கு சேலத்தை சேர்ந்தவர்கள் யாராவது உதவினார்களா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com