தூத்துக்குடியில் பன்றி இறைச்சி வியாபாரி கொலை வழக்கில் 5 பேர் கைது

தூத்துக்குடி மாதாநகர் பகுதியில் ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக சென்றபோது, அங்கே நின்ற பன்றி இறைச்சி வியாபாரி அந்த வாலிபர்களை கண்டித்துள்ளார்.
வியாபாரி கொலை, 5 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பன்றி இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பைக்கில் வேகமாக சென்றது குறித்து தகராறு

தூத்துக்குடி தாளமுத்துநகர், திரேஸ்நகரைச் சேர்ந்த மணி மகன் சேகர் (வயது 40). இவர் மாதாநகர் பகுதியில் பன்றி இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த 13-ம் தேதி இரவு, மாதாநகர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனது நண்பர்கள் 2 பேருடன் சேகர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் மதுபோதையில் அதிவேகமாக வந்துள்ளனர். குழந்தைகள் நடமாடும் சிறிய தெருவுக்குள் ஏன் இவ்வளவு வேகமாகச் செல்கிறீர்கள் என சேகர் அவர்களை வழிமறித்துக் கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் அந்த வாலிபர்களில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பன்றி இறைச்சி வியாபாரி கொலை

தாக்குதலுக்குள்ளான வாலிபர், சிறிது நேரத்தில் தனது நண்பர்களுடன் பத்ரகாளியம்மன் கோவில் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு நின்று கொண்டிருந்த சேகரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். பலத்த காயமடைந்த சேகர், 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூலை நேற்று காலையில் சேகர் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில், ஏட்டுகள் கோவிந்தராஜ், ரவிகுமார், வேல்முருகன் மற்றும் முதல் நிலை காவலர் சரவணகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த கொலையில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர்.

5 பேர் கைது

இந்த நிலையில், கொலை தொடர்பாக தாளமுத்துநகர் விவேகானந்தா நகரைச் சேர்ந்த முருகன் மகன் சச்சின்(24), தாளமுத்துநகர் மேல அழகாபுரியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அஜய்(19), மாதாநகரைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் நாகராஜ்(19), சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் சுதன்(18), தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து(30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com