

சென்னை,
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களான முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கிசுப்பையா மற்றும் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதில் மரகதம் குமரவேல் வெற்றி மதுராந்தகம் தொகுதி, சத்தியபாமா வெற்றி பெற்ற தாராபுரம் தொகுதி ஆகிய இரண்டிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதைத்தொடர்ந்து காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பை, பெருந்துறை மற்றும் முதல்-அமைச்சர் விஜய் போட்டியிட்டு வென்று, பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை எதிர் கொள்ள த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களும், நாம் தமிழர் கட்சியினரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இடைத்தேர்தல் பணிகளைத் தொடங்கிய சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்
விராலிமலை, கரூர் தொகுதிகளில் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் முன்னதாகவே இடைத்தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து அவர் பேசிய வீடியோக்களை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகிறார்கள்.
இதேபோன்று கரூர் தொகுதியிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடைத்தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி உள்ளார்.
அம்பை, பெருந்துறை ஆகிய தொகுதிகளிலும் த.வெ.க, தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவினர், நாம் தமிழர் கட்சியினர் இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். அம்பை தொகுதியில் முன்னாள் அமைச்சர் இசக்கிசுப்பையா பெருந்துறையில் ஜெயக்குமார் ஆகியோருக்கு த.வெ.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
விராலிமலை, கரூர், அம்பை, பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளும் ஏற்கனவே அ.தி.மு.க. வென்ற தொகுதிகள் என்பதால் எப்படியும் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க. உள்ளது. மதுராந்தகம், தாராபுரத்தில் கோட்டைவிட்டது போல இந்த 4 தொகுதிகளையும் விட்டு விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார்.
இதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.வினரும் ஆயத்தமாகி வருகிறார்கள். இருப்பினும் இடைத்தேர்தல் தோல்வி அவர்களை சோர்வடைய செய்திருக்கிறது.
விராலிமலை, அம்பை உள்ளிட்ட தொகுதிகளில் த.வெ.கவினர் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் விசில் சின்னத்தை வரைந்துள்ளனர். அம்பை தொகுதியில் கிராமங்கள் தோறும் சுவர்களில் விசில் சின்னத்தை வரைந்து இசக்கி சுப்பையாவின் பெயரையும் த.வெ.க.வினர் பொறித்துள்ளனர். அ.தி.மு.க. வென்ற 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களாக யாரை நிறுத்துவது என்பது பற்றிய ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தி.மு.க. சார்பிலும் யாரை போட்டியிட வைப்பது? என கட்சி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
திருச்சி கிழக்கு தொகுதி முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் த.வெ.க. சார்பில் அங்கு போட்டியிட போவது யார்? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொகுதி தி.மு.க. ஏற்கனவே வெற்றி பெற்று இருந்த தொகுதியாகும். சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.விடம் இந்த தொகுதியை பறிகொடுத்த தி.மு.க. மீண்டும் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் விஜய் வென்ற தொகுதி என்பதால் திருச்சி கிழக்கில் மீண்டும் வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்கிற வேகத்துடன் த.வெ.க. தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
இந்த 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கு தடை கேட்ட வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தான் அரசியல் கட்சியினர் இடைத்தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.