ஏரியில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு: நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் - அன்புமணி

காப்பகங்களில் தங்கி பயிலும் குழந்தைகளை நீர்நிலைகள் உள்ளிட்ட ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

திருவண்ணாமலையில் ஏரியில் குளிக்கச் சென்ற 4 மாணவிகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஆபத்தை உணராமல் காப்பக மாணவிகள் ஏரிக்கு குளிக்க அழைத்துச் செல்லப்பட்டதுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருவண்ணாமலை அடுத்த ஆணாய்பிறந்தான் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி பயின்று வந்த 4 மாணவிகளும், காப்பக ஊழியர் தேன்மொழி என்பவரும் அங்குள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்மழை காரணமாக ஏரி நிரம்பியிருந்ததாகவும், நீண்ட காலமாக தூர் வாரப்படாததால் சேறும் சகதியும் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் தான் அதில் சிக்கிக் கொண்ட குழந்தைகளால் மீண்டு வர முடியவில்லை. அவர்களைக் காப்பாற்றுவதற்காக முயன்ற காப்பக ஊழியரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்.

ஆபத்தை உணராமல் காப்பக மாணவிகள் ஏரிக்கு குளிக்க அழைத்துச் செல்லப்பட்டதுதான் இந்த விபத்துக்கு காரணம் ஆகும். இனிவரும் காலங்களில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் காப்பகங்களில் தங்கி பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை நீர்நிலைகள் உள்ளிட்ட ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அதற்கேற்ற வகையில் நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை அரசு உருவாக்கி வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X