

தேனி,
தேனி அருகே கூழையனூரில் தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையில் போலீசார் கஞ்சா கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கோடாங்கிபட்டியை சேர்ந்த லோகேஷ் (வயது 28), பிரகாஷ் (32) என்பது தெரியவந்தது.
அவர்கள் அதே ஊரை சேர்ந்த திவாகரன் என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கிக்கொண்டு கம்பத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றதாக தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து லோகேஷ், பிரகாஷ் இருவரையும் கைது செய்தனர். திவாகரன் மற்றும் இந்த கடத்தலில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.