

சென்னை,
15 கிலோ நகை... 11 கிலோவாக குறைந்தது எப்படி? என மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மதுரை பழங்காநத்தம்-காளவாசல் பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் நகைக்கடையின் புதிய ஷோரூம் உள்ளது. இந்த நகைக்கடைக்குள் கடந்த 12-ம் தேதி அதிகாலை புகுந்த வாலிபர், கடையில் இருந்து ரூ. 21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், பழங்காநத்தம் அருட்பெரும் ஜோதி தெருவை சேர்ந்த சுரேஷ் மகனான யூடியூபர் நிஷாந்த் (வயது 25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளையில் நிஷாந்தின் காதலியும், மதுரையை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சி (வயது 23) என்பவருக்கும், நிஷாந்தின் தந்தை சுரேஷ்-க்கும் (வயது 50) தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மீனாட்சி, சுரேசை போலீசார் கைது செய்தனர்.
மேலும், மதுரை மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 6 கிலோ தங்க, வைர நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனை தொடர்ந்து மதுரை நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான நிஷாந்தை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்தநிலையில், மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மீட்கப்பட்ட நகைகளை காட்சிப்படுத்திய பின் மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கொள்ளை போனது தெரிந்ததும் நகைகள் குறித்து கணக்கெடுப்பதில் காலதாமதம் இருந்ததால், தோராயமாக 15 முதல் 18 கிலோ இருக்கும் என புகாரில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு சரியான அளவீடு செய்து 11.38 கிலோ என்பது தெரியவந்தது. அந்த நகை முழுவதும் மீட்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வேகமாக திறக்கப்பட்டுள்ளது. இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததைப் பயன்படுத்தி நிஷாந்த் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டாரா என்பதை அறிய இரண்டு நாட்கள் அவர் கடைக்கு வந்து சென்ற சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவி கேமரா ஒன்றை மறைப்பதற்காக கெமிக்கல் போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அதன் தன்மையை அறிய ஆய்வகப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கொள்ளைக்குப் பிறகு நிஷாந்த் தனது தந்தையை அழைத்து பை ஒன்றைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிச் சென்று வீட்டில் வைத்திருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொள்ளை குறித்து தந்தைக்கு எப்போது தெரியவந்தது, நகைகளை மறைப்பதில் அவரது பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்கப்படும்.
நிஷாந்தின் தோழி மீனாட்சிக்கு கொள்ளைச் சம்பவம் தெரிந்திருந்தும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கிருக்கின்றன என்பது குறித்தும் அவருக்கு ஓரளவு தெரிந்திருந்தது. தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி நகைகள் மீட்கப்பட்டது.
இந்தக் கொள்ளையில் நிஷாந்த் மட்டுமே நேரடியாக ஈடுபட்டதாக இதுவரை தெரியவந்துள்ளது. இருப்பினும், நகைக்கடை ஊழியர்கள் அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது. மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகே முழுமையான விவரங்கள் தெரிய வரும்.
கொள்ளைக்குப் பயன்படுத்திய கருவிகள் இதுவரை முழுமையாக மீட்கப்படவில்லை. நிஷாந்தின் செல்போனை ஆய்வு செய்து, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கொள்ளைக்கான வழிமுறைகளைக் கற்றுக்கொண்டாரா என்பதும் விசாரிக்கப்படும். கொள்ளைக்குப் பிறகு பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சென்றதற்கான காரணம் மற்றும் யாரிடமாவது உதவி கேட்டாரா என்பதும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
இந்த வழக்கில் ஒரு காவல் துணை ஆணையர், 6 உதவி ஆணையர்கள், 14 முதல் 15 காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, வெளிமாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நகைக்கடைகளில் பர்குலர் அலாரம் இருந்தும் அது செயல்பாட்டில் இல்லாதது பாதுகாப்புக் குறைபாடு எனக் குறிப்பிட்ட ஆணையர், கடையின் உள்ளே மட்டுமின்றி வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். மதுரையில் உள்ள மற்ற நகைக்கடை உரிமையாளர்களை அழைத்து பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
முன்னதாகவே குற்றவாளி நிஷாந்த் மீது 304A விபத்து வழக்கு உள்ளது. வாகன விபத்து வழக்கு இதுவாகும். குற்றவாளியை கண்டறிய அவன் கையில் இருந்த டாட்டூ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகே கொள்ளையின் முழுமையான பின்னணி, மற்றவர்களின் தொடர்பு உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.
‘மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு கைதான நிஷாந்த் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி ஆகியோரை சமூக வலைதளங்களை மின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதன் மீது ஏதேனும் நடவடிக்கை உண்டா?' என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘தேவைப்பட்டால் அவர்களின் சமூகவலைதளங்களை முடக்குவோம்' என்றார்.