

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;
"திமுகவின் 5 ஆண்டு ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன். தமிழக மக்களை கடனாளி ஆக்கியதே திமுக அரசின் சாதனை. கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்றார்கள். கல்விக்கடன் ரத்துசெய்யப்படும் என்றார்கள். நீட் ரத்துசெய்யப்படும் என்றார்கள். செய்தார்களா?
ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்துதான் திமுக அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 கொடுத்தது. அதுவும், அதிமுக அழுத்தம் கொடுத்த காரணத்தினாலே ரூ.1,000 கொடுக்கப்பட்டது.
குடிக்க கூட நீர் இல்லாத காலத்தில், புயல் காலத்தில் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டது. கொரோனா காலத்தில் அரசுக்கு வருமானமே கிடையாது. அப்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அடிப்படை தேவைகளை செய்துகொடுத்தோம். உயர்கல்வியில் தமிழ்நாடு சாதனை படைக்க அதிமுகவே காரணம். மத்திய அரசு எங்களிடம் உள்ளது. தேவையான நிதியை பெறுவோம்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால், நகர பேருந்துகளில் ஆண்களும் இலவசமாக பயணிக்கலாம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2,000 வழங்கப்படும். தீபாவளிக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேவை வழங்கப்படும். ஆண்டுதோறும் பொங்கலுக்கு ரூ.1,000 வழங்கப்படும். நூறு நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டுக்கொடுக்கப்படும்.”
இவ்வாறு அவர் பேசினார்.