

விழுப்புரம்
நிலம் அபகரிப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த மயிலம் தீர்த்தக்குள தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி சாந்தா (வயது 60). இவருடைய தந்தை சுப்புராயன் என்பவருக்கு கடந்த 2008-ம் ஆண்டில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட பட்டாவின்படி 1.42 ஏக்கர் நிலம் கிடைத்தது.
மயிலம் பகுதியில் உள்ள இந்த நிலத்தை சாந்தா பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சூழலில் வானூர் தாலுகா வங்காரம் கிராமத்தை சேர்ந்த முருகன், ரமேஷ் என்கிற ரங்கசாமி, மயிலத்தை சேர்ந்த அம்மையப்பன், புதுச்சேரி காளீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சம்பத் ஆகிய 4 பேரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்து 70 ஆயிரமாகும்.
4 பேர் மீது வழக்கு
இதுகுறித்து சாந்தா, விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் முருகன், ரமேஷ், அம்மையப்பன், சம்பத் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.