

கரூர் மாவட்டம் நெரூர் அருகே சின்னகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 63). இவரது மனைவி ஜானகி (60). இந்த தம்பதிக்கு சுகுணா (35) என்ற மகனும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். மகள் சுகுணா கரூர் மாவட்ட வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சிவானி (10) என்ற மகளும், ஆதிரன் (4) என்ற மகனும் இருந்தனர். ராமசாமி தற்போது கரூர் வெங்கமேடு பகுதியில் வசித்து வந்தார். மேலும் ராமசாமி டைல்ஸ் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று மாலை கரூர் மாவட்டம் நெரூர் அருகே சின்னகாளிபாளையத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள விவசாய கிணற்றில் ராமசாமி, அவரது மனைவி ஜானகி, மகள் சுகுணா, பேத்தி சிவானி, பேரன் ஆதிரன் ஆகிய 5 பேரும் பிணமாக மிதந்து கொண்டிருந்தனர். இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக இதுகுறித்து வாங்கல் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர். இதேபோல சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி நேரில் வந்து பார்வையிட்டார்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி மிதந்து கொண்டிருந்த 5 பேரின் உடலையும் மீட்டு ஆம்புலன்சில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ராமசாமியின் வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவிரக்தியில் இருந்த ராமசாமி, தனது குடும்பத்துடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது